அப்பாவுக்கு கிட்னி கொடுப்பதில் பெருமைக் கொள்கிறேன்..! - லாலு பிரசாத் யாதவ் மகள் பெருமிதம்
லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா தன்னுடைய தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார்.
புதுடெல்லி,
ராஷ்டிரீய ஜனதாதள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ், சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெறுவதற்காக சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றார். அங்கு சிகிச்சை முடிவடைந்து கடந்த மாதம் டெல்லி திரும்பினார்.
தற்போது அவரது மூத்த மகள் மிசா பாரதியின் இல்லத்தில் அவர் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். லாலுபிரசாத் தொடர்ந்து சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால் அவருடைய சிறுநீரகத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா தன்னுடைய தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த ரோகினி ஆச்சார்யா, ஆம் உண்மைதான். அப்பாவுக்கு என்னுடைய சிறுநீரகத்தை அளிக்கப் போகிறேன். அதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால், இந்த மாதம் இறுதியில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் கடந்த மாதம் ரோகினி ஆச்சார்யா தன் டுவிட்டர் பக்கத்தில், ``இந்த நாட்டுக்கு நீங்கள் தேவை. அதன்மூலம் நாடு கொடுங்கோல் சிந்தனையை எதிர்த்துப் போராட முடியும்" என்று கூறியிருந்தார்.