மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் உடலுடன் கிராம மக்கள் போராட்டம்

பெலகாவி அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் விவசாயி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-06-27 21:11 GMT

பெங்களூரு

பெலகாவி அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் விவசாயி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதியவர் உடலுடன் போராட்டம்

பெலகாவி மாவட்டம் ஏணகி கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் மயானம் உள்ளது. ஆனால் அந்த மயானத்திற்கு செல்ல பாதை இல்லை. இதன் காரணமாக ஏணகி கிராமத்தை சேர்நதவர்கள் யாராவது உயிர் இழந்தால், அவா்களது உடல் போலீசார் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.வின் உத்தரவின் பேரில் பிறநபர்களுக்கு சொந்தமான நிலத்தின் வழியாக கொண்டு போய் அடக்கம் செய்யப்பட்டு வந்தது. மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஏணகி கிராமத்தை சோந்த அப்துல்(வயது 65) என்பவர் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாததால், நேற்று காலையில் ஏணகி கிராமத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பெலகாவி டவுனில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் கொண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அப்துலின் உடலை வைத்து மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலெக்டர் வாக்குறுதி

இந்த போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினா். ஆனால் கலெக்டர் வந்தால் மட்டுமே உடலை எடுப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் நிதேஷ் பட்டீல் அங்கு விரைந்து வந்தார். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுவையும் அவர் வாங்கி கொண்டாா்.

மேலும் மயானத்திற்கு செல்ல விரைவில் பாதை ஏற்படுத்தி கொடுப்பதாகவும், கூடிய விரைவில் அந்த கிராமத்திற்கு தான் வருவதாகவும் உறுதி அளித்தார். ஆனால் மாவட்ட கலெக்டரின் வாக்குறுதியை ஏற்க விவசாய சங்கத்தினர் மறுத்துவிட்டு ஒரு பெண் விவசாயி உள்பட ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கோஷங்களை எழுப்பினார்கள்.

பரபரப்பு

இதையடுத்து, பெண் விவசாயி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கிராம மக்களும் முதியவரின் உடலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு உண்டானது.

Tags:    

மேலும் செய்திகள்