கல்குவாரி விபத்தில் 3 பேர் சாவு: கிம்ஸ் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

சாம்ராஜ்நகரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-27 21:36 GMT

பெங்களூரு:

சாம்ராஜ்நகரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல் குவாரி விபத்து

சாம்ராஜ்நகர் மாவட்டம் பிசல்வாடி கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் நேற்று முன்தினம் 12 கூலி தொழிலாளிகள் வேலை பார்த்து வந்தனர். இவர்களில் காசலவாடியை அடுத்த மோலே கிராமத்தை சேர்ந்த குமார்(வயது28), சிவராஜ் (35), சித்தராஜ் (27) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் 3 பேரும் பாறைகளில் வெடி வைப்பதற்காக எந்திரங்களை கொண்டு துளையிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பாறையில் அதிர்வு ஏற்பட்டதில், குவாரியின் மேல்புறம் குவித்து வைக்கப்பட்ட பாறைகள் கீழே உருண்டு விழுந்தது. இதில் கூலி தொழிலாளிகள் 3 பேரும் சிக்கிகொண்டனர். பலத்த காயமடைந்த அவர்கள் உடல் நசுங்கி இறந்தனர். இந்த விபத்து குறித்து சாம்ராஜ்நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இறந்தவர்களிடன் உடல் வைக்கப்பட்டிருந்த கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடபோவதில்லை என்று கூறினர்.

இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நிவாரண தொகையையும் வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அவர்கள் இறந்தவர்களின் உடலை வாங்கி சென்று, தகனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்