சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பெண்ணின் உடலுடன் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம்
சோழபுரா கிராமத்தில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பெண்ணின் உடலுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிக்கமகளூரு:
சோழபுரா கிராமத்தில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பெண்ணின் உடலுடன் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம்
சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா சோழபுரா கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சுடுகாடு இல்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சோழபுரா கிராமத்தைச் சேர்ந்த திம்மம்மா(வயது 45) என்ற பெண் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாததால், அவருடைய உடலுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு கிராம மக்களும், குடும்பத்தினரும் வந்தனர்.
அவர்கள் உடல் அடங்கிய ஆம்புலன்சை தாசில்தார் அலுவலகம் முன்பு வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த அஜ்ஜாம்புரா போலீசார், தாசில்தார் வீரேஸ்வர ரெட்டி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுடுகாட்டுக்கு நிலம்...
அப்போது உங்களுக்கென சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் சில குளறுபடிகள் உள்ளன. எனவே அதலா கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் திம்மம்மாவின் உடலை அடக்கம் செய்யுங்கள் என்று தாசில்தார் கூறினார். மேலும் உடனடியாக இதுபற்றி கலெக்டரிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், நிலம் ஒதுக்கி தருவதாகவும் கூறினார்.
அவர் கூறியதைக் கேட்ட கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியும் விரைவில் சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி தர ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்தார். அதையடுத்து சமாதானம் அடைந்த கிராம மக்கள் திம்மம்மாவின் உடலை எடுத்துக் கொண்டு அதலா கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.