பீகாரில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை
பீகாரில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 3 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.;
வக்கீலுடன் ஆலோசனை
பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசுதோஷ் குமார் ஷாஹி (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று இரவு ஷாஹி தன்னுடைய வக்கீலான சயீத் காசிமின் வீட்டுக்கு சென்றார்.
வீடு புகுந்து துப்பாக்கிச்சூடு
அவரது பாதுகாப்புக்காக நிஜாமுதீன், ராகுல் ஆகிய 2 பாதுகாவலர்கள் உடன் சென்றிருந்தனர். ஷாஹியும், வக்கீல் காசிமும் வீட்டுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் ஷாஹி உள்பட அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டு விட்டு தப்பி சென்றனர்.
3 பேர் பரிதாப சாவு
இந்த கோர சம்பவத்தில் ஷாஹி மற்றும் அவரது பாதுகாவலர்கள் நிஜாமுதீன், ராகுல் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் வக்கீல் காசிமும், அவரது உதவியாளரான ஓம்நாத் என்பவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.