கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேறியது
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கர்நாடக மேல்-சபையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேறியது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.;
பெங்களூரு:
மதமாற்ற தடை சட்டம்
கர்நாடகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா ெகாண்டுவரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் அந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கடும் அமளிக்கு இடையே அப்போது சட்டசபையில் மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் கர்நாடக மேல்-சபையிலும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேல்-சபையில் பா.ஜனதா பெரும்பான்மை பலம் இல்லாததால் அந்த கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேறாமல் போனது. அதன் பின்னர் கர்நாடக மேல்-சபையில் காலியான பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இதனால் மேல்-சபையை பா.ஜனதா தனிபலம் பெற்றது.
மேல்-சபையில் தாக்கல்
இதையடுத்து கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அரசு தீவிரம் காட்டி வந்தது. அதன்படி கடந்த 12-ந்தேதி மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சட்டசபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று தொடங்கியது.
அப்போது கர்நாடக மேல்-சபையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேற்று கர்நாடக மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
சலுகைகளை பெற முடியாது
கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது இந்த மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டது. நாங்கள் அதற்கு இறுதி வடிவம் கொடுத்து மசோதாவை தாக்கல் செய்துள்ளோம். அனைவருக்கும் தங்களின் மத வழக்கப்படி வாழும் உரிமை உள்ளது. ஆனால் சமீபகாலமாக பிற மதத்தினரை வலுக்கட்டாயமாகவோ அல்லது ஆசைகளை காட்டியோ மதம் மாற்றுகிறார்கள்.
சுய விருப்பத்துடன் மதம் மாற விரும்புகிறவர்கள் அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மதம் மாற்றும் நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் அதுபற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்துவார். மதம் மாறுகிறவர்கள் சாதி அடிப்படையில் பெறும் சலுகைகளை இழப்பார்கள். இதற்கு முன்பு மதம் மாறினாலும் சாதி அடிப்படையில் சலுகைகளை பெற்று வந்தனர். இனி மேல் அந்த சலுகைகளை பெற முடியாது.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.
மசோதா நிறைவேறியது
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் பேசுகையில், "கர்நாடக அரசு அரசியல் சாசனத்திற்கு எதிராக இந்த மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. மதமாற்ற நிகழ்வுகளில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கவில்லை. மாநிலத்தில் எத்தனை மதமாற்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது குறித்து அரசு கூற வேண்டும். ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் இந்த மசோதாவை நிறைவேற்றி கொள்வார்கள். இந்த சட்டத்திருத்த மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது" என்றார்.
இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனதா தளம் (எஸ்) கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே மாநில அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், மசோதா நகலை கிழித்து எறிந்தார். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
இருசபைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதால், கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த மசோதாவை கர்நாடக அரசு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. கவர்னர் அனுமதி வழங்கியதும் இந்த மசோதா சட்ட வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தின்படி, கட்டாய மதம் மாற்றம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.