குடும்ப அரசியல் பற்றி பிரியங்கா பேசுவது வேடிக்கையானது - சந்திரசேகர ராவ் மகள் பதிலடி

குடும்ப அரசியல் பற்றி பிரியங்கா பேசுவது வேடிக்கையானது என்று சந்திரசேகர ராவின் மகள் கவிதா கூறினார்.

Update: 2023-10-19 21:09 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் அங்குள்ள முளுகு என்ற இடத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ''தெலுங்கானா மக்கள், சமூக நீதி கிடைக்கும் என்று கனவு கண்டனர். ஆனால், முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் குடும்பத்திலேயே 3 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்று கூறினார்,

இந்நிலையில், சந்திரசேகர ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, நேற்று அர்மூர் என்ற இடத்தில் நடந்த பதுக்கம்மா திருவிழாவில் பங்கேற்றார்.

கண்ணாடி வீடு

பின்னர், பிரியங்காவின் விமர்சனம் குறித்து கவிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மோதிலால் நேருவின் எள்ளுப்பேத்தியும், ஜவகர்லால் நேருவின் கொள்ளுப்பேத்தியும், இந்திரா காந்தியின் பேத்தியும், ராஜீவ்காந்தியின் மகளுமான பிரியங்கா, குடும்ப அரசியல் பற்றி பேசுகிறார்.

இதுவரையிலான தேர்தல் பிரசாரத்தில் நான் கேள்விப்பட்ட வேடிக்கையான விஷயம் இதுதான். குடும்ப அரசியலைப் பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை.

அவர் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறியக்கூடாது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்