பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார் பிரியங்கா காந்தி...! விரைவில் புதிய பதவி ...!
உத்திரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பிரியங்கா காந்தி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ,
கடந்த மாதம் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. அடுத்து காங்கிரஸ் வரவிருக்கும் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற 5 மாநிலத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் சில மாற்றங்கள் வருவதாக தெரிகிறது.
தற்போது உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரியங்கா காந்தி அந்த பதவியில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை தொடர்ந்து அவருக்கு கட்சியில் முக்கியப் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவாரா? என்பது குறித்து காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அங்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது. அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இந்த சமயத்தில் பிரியங்கா காந்தி விஜயநகரில் 'ரோட்ஷோ' நடத்துகிறார். தற்செயலாக இது கேரளாவின் வயநாடு தொகுதியில் வரவிருக்கும் இடைத்தேர்தலுடன் ஒத்துப்போகிறது. வயநாட்டில் போட்டியிடும் வேட்பாளர் குறித்தும் காங்கிரஸ் கட்சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.