தற்கொலையை வைத்து தமாஷ் செய்வதா?-பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம்
தற்கொலையை வைத்து தமாஷ் செய்வதா? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று முன்தினம் டி.வி. செய்தி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசுகிறபோது தமாஷாக ஒரு விஷயத்தைச் சொன்னார். ஒரு பேராசிரியரின் மகள் தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். மகளின் தற்கொலை குறிப்பை வாசித்த தந்தையான பேராசிரியருக்கு மிகுந்த வருத்தம். என்னவென்று தெரியுமா? "என் மகளுக்கு இவ்வளவு காலம் நான் முயற்சி செய்து கற்பித்து வந்தும்கூட, தற்கொலைக்குறிப்பில் எழுத்துப்பிழை இருக்கிறதே?" என்று. இதுதான் பிரதமர் செய்த தமாஷ்.
இங்கே மகள் இறந்து விட்ட கவலையை விட பேராசிரியருக்கு மகள் எழுதிய தற்கொலைக்குறிப்பில் எழுத்துப்பிழை இருக்கிறதே என்றுதான் கவலை.தற்கொலையை வைத்து பிரதமர் மோடி இப்படி தமாஷ் செய்ததற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடி பேச்சின் வீடியோவை இணைத்து ஒரு கருத்துப்பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் பிரியங்கா காந்தி கூறி இருப்பதாவது:-
மன உளைச்சலுக்கும், தற்கொலைக்கும் ஆளாவது, அதிலும் குறிப்பாக இளம்வயதினர் இவற்றுக்கு ஆளாவது சிரிப்பதற்குரிய விஷயம் அல்ல.தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி.) புள்ளிவிவரத்தின்படி, 2021-ம் ஆண்டில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மை சதவீதத்தினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். இது துயரம்தானேயன்றி சிரிப்பதற்குரிய தமாஷ் அல்ல. இந்த தமாசுக்கு பிரதமரும், அவரது தமாசைப் பார்த்து மனம் விட்டுச்சிரித்தவர்களும், இந்த வேதனைக்குரிய மனநலப்பிரச்சினைகளை ஏளனம் செய்வதற்குப் பதிலாக தங்களை நன்றாகப் பயிற்றுவித்துக்கொண்டு, தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்லது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.