ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம்.. மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு- 8 பேர் காயம்
மும்பை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி விபத்துக்குள்ளானது.;
மும்பை,
விசாகப்பட்டினத்திலிருந்து மும்பை செல்லும் தனியார் விமானம் இன்று மாலை மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை எண் 27 இல் தரையிறங்கும் போது ஓடுபாதையிலிருந்து சறுகியதோடு மோதி விபத்துக்குள்ளானது. விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு VSR வென்ச்சர்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் லியர்ஜெட் 45 விமானம் வந்தது. 9 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்று விபத்திற்குள்ளானது. விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
இந்த விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானம் தரையிறங்கும் போது மழை பெய்து கொண்டு இருந்ததால் குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டதாகவும் விபத்துக்கு இதுவே காரணமாக இருக்கலாம் எனவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தினால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் சேவை பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் ஐதரபாத் விமான நிலையத்திற்கும், சில விமானங்கள் கோவாவிற்கும் திருப்பி விடப்பட்டன.