தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் பள்ளி தாளாளர் கைது

தலைமை ஆசிரியையிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய தனியார் தாளாளர் லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-07-09 00:15 IST

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் பஜ்பே சுங்கதகட்டே பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஷோபா ராணி என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வருகிற 31-ந்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார்.

இந்த நிலையில் தனியார் பள்ளியின் தாளாளர் ஜோதி பூஜாரி என்பவரிடம் தான் பணி ஓய்வு பெற இருப்பதால், தனது ஓய்வூதிய ஆவணங்களில் கையெழுத்திட்டு அவற்றை கல்வி அலுவலரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு ஷோபா ராணி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தார். அப்போது ஓய்வூதிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்றால் எனக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் ஜோதி பூஜாரி கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷோபா ராணி, இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் கொடுத்தார். அப்போது லோக் அயுக்தா போலீசார், ஷோபா ராணிக்கு சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர், தாளாளர் ஜோதி பூஜாரியை சந்தித்து ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுப்பதாக கூறினார். இதற்கு ஜோதி பூஜாரி ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோதி பூஜாரியின் வீட்டுக்கு சென்று லோக் அயுக்தா போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய நோட்டுகள் ரூ.5 லட்சத்தை ஷோபா ராணி, ஜோதி பூஜாரியிடம் கொடுத்தார். அந்த பணத்தை ஜோதி பூஜாரி வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார், ஜோதி பூஜாரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்