அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் - நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி,
இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான "சதைவ் அடல்" மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேலும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தனது 93வது வயதில் காலமானார். அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.