மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
பிரதமர் மோடி இன்று மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் இன்று காலை நடைபெறும் வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் காலை 11.30 மணியளவில் ஷில்லாங்கில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலைத் திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஷில்லாங் தொழில் நுட்ப பூங்காவின் 2-ம் கட்டப் பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு செல்லும் பிரதமர் மோடி, பிற்பகல் 2.45 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அப்போது ரூ.4,350 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்தப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.3,400 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். அகர்தலா புறவழிச்சாலையை அகலப்படுத்தும் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.