இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு
பிரதமர் மோடி இன்று நடத்திய ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை.
புதுடெல்லி,
ஜி-20 அமைப்புக்கான உச்சி மாநாட்டை இந்தியா இன்று நடத்தியது. பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வழியே நடந்த இந்த மாநாட்டில், உறுப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக சீன பிரதமர் லி கியாங் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, முழுவதும் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், பரஸ்பர நம்பிக்கை நம்மை பிணைக்கிறது. ஒருவருடன் ஒருவர் நம்மை இணைக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து அவர், இஸ்ரேலின் பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க உள்ளது என்ற செய்தி வரவேற்புக்குரியது. பணய கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் எந்த பகுதியில் கொல்லப்பட்டாலும் அது கண்டனத்திற்குரியது என கூறிய அவர், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவ கூடிய ஸ்திரத்தன்மையற்ற நிலை கவலை அளிக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையேயான மோதல், பிராந்திய மோதலாக உருவாகி விட கூடாது என்று கூறினார். இந்த மோதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.