சரியான நபருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு பிரதமர் மோடி சிறந்த உதாரணம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புகழாரம்
சரியான நபருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு பிரதமர் மோடி சிறந்த உதாரணம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.;
பெங்களூரு:
தன்னிறைவு
சுதந்திர தின பவள விழா ஆண்டையொட்டி மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடும் கூட்டம் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்து பேசினார். பிரதமர் மோடி, நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்தகைய கலந்துரையாடல் கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
உழைக்கும் வர்க்கத்தினர் நாட்டை கட்டமைக்கிறார்கள். விவசாயிகள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு துறையினர் நாட்டை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சமுதாயத்தின் கடைகோடி மக்களுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் தன்னிறைவு அடைவார்கள். சுயமரியாதையுடன் வாழ்வார்கள்.
குடிநீர் இணைப்பு
மத்திய அரசின் ஜன்தன், தூய்மை பாரதம், கிசான் சம்மான் திட்டம், ஆயுஸ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். அடிமட்ட மக்கள் முன்னேற்றம் அடையும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த திட்டங்களுக்கான நிதி மேல்தட்டில் இருந்து அடிமட்ட மக்களுக்கு செல்லவேண்டும். முந்தைய ஆட்சிகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் திட்டங்களின் பயன் கடைகோடி மக்களை போய் சென்றடையவில்லை.
ஆனால் மோடி பிரதமராக வந்த பிறகு திட்டங்களின் பயன் பயனாளிகளுக்கு நேரடியாக போய் சேருகிறது. தூய்மை பாரதத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன் மூலம் கடைகோடி மக்கள் சுகாதாரத்துடன் வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பலமான இந்தியா உருவாக்கப்படுகிறது. முன்பு ஆட்சியில் இருந்த எந்த பிரதமரும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவில்லை.
18 லட்சம் வீடுகள்
ஆனால் பிரதமர் மோடி ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தை அறிவித்து அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்து கொடுத்துள்ளார். இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. வருகிற 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து தரப்பு மக்களுக்கும் வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 18 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன.
நாட்டை ஆள சரியான நபருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு பிரதமர் மோடி சிறந்த உதாரணம். ஒரு திடமான தலைவராக நாட்டின் எல்லையை மோடி பாதுகாத்து வருகிறார். உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த மரியாதையுடன் பார்க்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடி நிலை
மக்கள்தொகை நாட்டின் வளர்ச்சிக்கு சிக்கலாக உள்ளதாக கூறும் கூற்றை மோடி பொய்யாக்கியுள்ளார். மனித வளம் நாட்டின் பலம் என்பதை அவர் நிரூபித்துள்ளார். நாம் தற்போது சுதந்திர தின பவள ஆண்டில் இருக்கிறோம். மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து வளர்த்துள்ளதே பெரிய சாதனை ஆகும். நமது நாட்டின் வரலாற்றில் நெருக்கடி நிலை இருந்த காலம் ஒரு கரும்புள்ளியாக உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அந்த திட்டங்களால் கிடைத்துள்ள நன்மைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த விழாவில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள், கூட்டுறவு மந்திரி எஸ்.டி.சோமசேகர், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, வீட்டு வசதி மந்திரி சோமண்ணா, பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், பி.சி.மோகன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.