'பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்' - நிர்மலா சீதாராமன் பேச்சு

செங்கோலை பிரதமர் மோடி சரியான இடத்தில் கொண்டு வைத்திருக்கிறார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.;

Update: 2023-08-11 00:25 GMT

Image Courtesy : ANI

புதுடெல்லி,

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

"மூத்த உறுப்பினர் டி.ஆர்.பாலு, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்காதது பற்றி மத்திய அரசுக்கு வெட்கமாக இல்லையா? என கேட்டார். அதற்கு சில விளக்கங்களை தர விரும்புகிறேன்.

ரூ.1,977 கோடியிலான மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,627 கோடி ஜப்பான் நிறுவனத்தில் கடன் எடுத்து மத்திய அரசு அதை செலுத்தும். தமிழ்நாடு அரசுக்கு எந்த ஒரு கடன் உபாதையும் இல்லை.

மற்ற இடங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள்தான் இருக்கும். ஆனால் மதுரையில் 950 படுக்கைகள் இருக்கும். கூடுதலாக தரப்படும் 150 படுக்கைகள் தொற்றுநோய் பிரிவுக்கானது. எனவே தமிழ்நாட்டுக்கு கடனும் இல்லை. நிறைய படுக்கைகளும் கிடைக்கும்.

(அப்போது, எய்ம்ஸ் எப்போ வரும்? என தி.மு.க. உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு நிர்மலா சீதாராமன்…) 'இப்போது வரைக்கும் வெட்கமாக இல்லையா? என கேட்டவர்கள், தற்போது கடனை மத்திய அரசு செலுத்தும் என்று சொன்னவுடன் எப்போது வரும்?' என கேட்கிறார்கள்.

நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு தாமதப்படுத்தியதால்தான் மொத்த திட்ட மதிப்பு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக உயர்ந்தது. எனவே, பழியை அந்த மாநில அரசுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மத்திய அரசு மீது போடக்கூடாது.

நாட்டின் முதல் பிரதமர்தான் ஆதீனத்திடம் இருந்து செங்கோலை பெற்றார். கைத்தடி என்று வைக்கப்பட்டிருந்த அந்த செங்கோலை பிரதமர் மோடி சரியான இடத்தில் கொண்டு வைத்திருக்கிறார். பிரதமர் அதற்கு மரியாதை தந்து இருக்கிறார். தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் உள்ள நெடுங்கால தொடர்பை போற்றி காசி தமிழ் சங்கமம் நடத்தினார்.

மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டுக்கு சென்று தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடினார். மன்கி பாத் உரையில் எத்தனை முறை தமிழ்நாட்டை குறிப்பிட்டு இருக்கிறார்?. புறநானூறு, திருக்குறள் பற்றி எடுத்துரைத்து இருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிகள் விளையாட்டு என்று சொல்லப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் அதற்கு நிரந்தர அனுமதி பெற்றுத்தரப்பட்டது.

இந்தி திணிப்பு என்றும் உறுப்பினர் கனிமொழி கூறினார். இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தியும், சமஸ்கிருதமும் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற திணிப்பும் இருக்கிறது. நாங்கள் யாரும் அந்த மொழிகளை கற்றுக்கொள்ள முடியாதபடி திணிப்பு இருந்தது. அது கொள்கை அளவிலான திணிப்பு. தமிழை வளர்க்க உங்களுக்கு எவ்வளவு அதிகாரமும் இருக்கலாம்.

ஆனால் இன்னொருத்தரை இந்தி படிக்காதே, சமஸ்கிருதம் படிக்காதே என்று சொல்ல உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்தியை வளர்க்கக்கூடாது, தமிழைத்தான் வளர்க்க வேண்டும் என்ற ஆணவத்தில் எங்களை இந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடவில்லை. இது என் வாழ்வில் எனக்கு அங்கு கிடைத்த அனுபவம்.

அடுத்ததாக சிலப்பதிகாரம் பற்றி சொல்கிறேன். சிலம்புச்செல்வர் என அழைக்கப்படும் ம.பொசி. எனும் மயிலை பொன்னுசாமி சிவஞானம் 1951-ம் ஆண்டு தமிழ் முரசு பத்திரிகையில், "நாம் திராவிடர் அல்ல, தமிழர். நமது தாயகத்தின் பெயர் திராவிடம் அன்று, தமிழகம். அதன் வடக்கு எல்லை விந்தியம் அன்று, வேங்கடம். தமிழ்நாட்டு அந்தணர் ஆரியர் அல்லர், தமிழர். தமிழர் பண்பாடுகளும், பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் வேங்கடத்துக்கு வெளியே உள்ளவர்களின் பண்பாடுகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் வேறானவை ஆயினும் விரோதமானவை அல்ல என சிலப்பதிகாரம் கூறுகிறது" என்று எழுதி இருக்கிறார்.

பிரதமர் மோடி, சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் புரியும். ஆனால் இதில் அரசியல் செய்கிறவர்கள் உண்மையை சொல்ல விரும்பவில்லை."

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

இவரது உரையின்போது தி.மு.க. உறுப்பினர்கள் இடையில் வெளிநடப்பு செய்தனர். அப்போது, நிர்மலா சீதாராமன், 'ஏன் ஓடுகிறீர்கள், வெளியே போனாலும் டி.வி.யில் பாருங்கள்' என்று கிண்டலாக கூறினார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், 'கனிமொழி எம்.பி., மகாபாரதத்தின் திரவுபதி பற்றி குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எங்கு நடந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. வேதனையானது அது. ஆனால் கனிமொழி ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.

1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில், முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுக்கப்பட்டது. அவர் அவமானப்படுத்தப் பட்டார்.

எல்லோரும் உட்கார்ந்து சிரித்தனர். அன்று அவர் ஒரு உறுதிமொழி எடுத்தார். "இனி நான் இந்த அவைக்கு வரமாட்டேன், வந்தால் முதல்-அமைச்சராகத்தான் வருவேன்" என்று உறுதிமொழி எடுத்தார். அதே மாதிரி 2 ஆண்டுகள் கழித்து முதல்-அமைச்சராக அவைக்கு திரும்பி வந்தார். அந்த கட்சி இன்று திரவுபதி பற்றி குறிப்பிடுகிறது. என்ன அநியாயம் இது?.

அதுமட்டுமல்ல, ஒரு துயரைப் பார்த்து மவுனமாக இருப்பவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று குறிப்பிட்டார். அப்படியென்றால் அன்று மவுனமாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனை கிடைக்காதா?' என்று பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்