கலபுரகி பயனாளியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கலபுரகியை சேர்ந்த பயனாளியுடன் கலந்துரையாடினார்

Update: 2022-05-31 17:13 GMT

பெங்களூரு: மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி கலபுரகியை சேர்ந்த பயனாளியுடன் கலந்துரையாடினார்.

கன்னடத்தில் பதிலளித்தார்

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சில திட்டங்களில் பயனாளிகளின் வங்கி கணக்கில் அரசின் நிதி உதவி நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி நேற்று நாடு முழுவதும் காணொலி மூலம் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். பெங்களூரு விதான சவுதாவில் காணொலி மூலமாக கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் கலந்து கொண்ட கலபுரகியை சேர்ந்த பயனாளி சந்தோஷி என்பவருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது மோடி, மத்திய அரசின் திட்டங்களால் உங்களுக்கு பயன் கிடைத்துள்ளதா? என்று கேள்வி கேட்டார். அதற்கு அந்த பயனாளி கன்னடத்தில் பதிலளித்தார். அதற்கு மோடி, 'கன்னடத்தில் பேசினாலும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது. ஏனென்றால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை உங்களின் முகம் வெளிப்படுத்துகிறது. நான் மட்டும் கர்நாடகத்தில் கட்சி தொண்டராக இருந்தால் உங்கள் வீட்டிற்கே வந்து உங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வேன். நீங்கள் உங்கள் பகுதியில் பெரிய தலைவராக வருவீர்கள்' என்றார்.

இந்தியில் மொழியாக்கம்

பயனாளி பேசியதை அங்கு இருந்த அரசு அதிகாரி இந்தியில் மொழியாக்கம் செய்து கூறினார். அந்த பயனாளி, தனது தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதற்கு மலிவு விலை மருந்து கடையில் குறைந்த விலையில் மருந்துகள் வாங்கி பயன் அடைந்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதற்காக உங்களுக்கு(பிரதமர் மோடி) நன்றி கூறுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்