பிரதமர் மோடி, அமித்ஷா யார் வந்தாலும் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷா என யார் வந்தாலும் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
சிக்கமகளூரு:-
வெறுப்பு அரசியல்
சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா வந்திருந்தார். அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வருகின்றனர். திப்பு சுல்தான் பற்றியும் அவரது சித்தாந்தங்கள் பற்றியும் பேசுபவர்கள் ஏன், சாவர்க்கர் பற்றி பேசுவது இல்லை. மகாத்மா காந்தியின் வரலாறு குறித்து ஏன் பேச மறுக்கின்றனர்.
இது பா.ஜனதாவின் வெறுப்பு அரசியலை காட்டுகிறது. சித்தராமையாவை முடித்துவிடுவோம் என்று கூறுகின்றனர். என்னை யாரும் முடிக்க முடியாது. பா.ஜனதாவை சேர்ந்த நளின் குமார் கட்டீல், ஜே.பி.நட்டாவிற்கு அரசியல் குறித்து தெரியவில்லை. அவர்கள் அமித்ஷா, மோடியை 100 முறை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வந்தாலும், இந்த முறை பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி.
சி.பி.ஐ. விசாரணை
நான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் அனைவரும் சமம். ஜாதி, மதத்திற்கு அப்பார்பட்டவன் நான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் நடந்ததாக கூறுகிறவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன்.
நான் முதல்- மந்திரியாக இருந்தபோது, 8 முறை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டேன். ஆனால் ஆளும் பா.ஜனதா கட்சி 40 சதவீதம் கமிஷன் விவகாரத்தில் ஏன் சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்ைல. மத்திய மந்திரி ஷோபா தர்மத்தை பற்றி பேசுகிறார். அவருக்கு தர்மம் என்றால் என்னவென்பது தெரியாது. அதை அவர் தெரிந்து கொண்டு பேசவேண்டும்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தகராறில் தலையிட விரும்பவில்லை. இந்த பிரச்சினைக்கு அரசு நல்ல தீர்வு காணும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.