விமான கண்காட்சியில் வானில் சாகசம் செய்த விமானங்களை கண்டுரசித்த பிரதமர் மோடி; கைத்தட்டி ஆரவாரம் செய்தார்

பெங்களூரு விமான கண்காட்சியில் வானில் சாகசம் நிகழ்த்திய விமானங்களை கண்டு ரசித்த பிரதமர் மோடி கைத்தட்டி ஆரவாரம் செய்தார்.

Update: 2023-02-13 21:51 GMT

பெங்களூரு:

கைத்தட்டி ஆரவாரம்

பெங்களூருவில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் ஆசியாவின் மிகப்பெரிய 14-வது சர்வதேச பெங்களூரு விமான கண்காட்சி(ஏரோ இந்தியா) தொடக்க விழா பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் போர் விமானங்களின் சாகச காட்சிகளை கண்டு ரசித்தார். மெய்சிலிர்க்கும் காட்சிகளை கண்டபோது அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார்.

மெய்சிலிர்க்க வைத்த விமான சாகசம்

சரியாக காலை 9.30 மணிக்கு விழா தொடங்கியது. ஒரு மணி நேரம் இந்த விழா நடைபெற்றது. அதன் பிறகு விமான சாகச நிகழ்வு 10.30 மணிக்கு தொடங்கி காலை 11.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதில் தேஜஸ், சுகோய், சூர்ய கிரண், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள், விமானங்கள் வானில் வர்ண ஜாலம் புரிந்தன. ஆனால் நேற்று நடந்த சாகசத்தில் சாரங், ரபேல் போர் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்தவில்லை. சாகசத்தில் ஈடுபட்ட விமானங்கள் வால் பகுதியில் இருந்து வெண் புகையை கக்கியபடி காற்றை கிழித்து கொண்டு வானில் செங்குத்தாக உயர்ந்தும், பூமியை நோக்கியும் பறந்து மெய் சிலிர்க்க வைத்தன.

809 நிறுவனங்கள் பங்கேற்பு

இந்த பெங்களூரு விமான கண்காட்சியில் மொத்தம் 809 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இதில் 110 நிறுவனங்கள் வெளிநாடுகளை சேர்ந்தவை. இந்த கண்காட்சியில் 35 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 809 நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. அந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு விமானங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்தியுள்ளன. இதில் முக்கியமாக போயிங் வணிக விமான நிறுவனம், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் விமானவியல் நிறுவனம், ஜெனரல் ஆட்டோமிக்ஸ் உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த தனியார் விமானவியல் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

இந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்திய சிந்தியா மற்றும் உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விமான கண்காட்சி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

இந்த கண்காட்சியையொட்டி எலகங்கா விமானப்படை தளத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான சாகச நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு 16, 17-ந் தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை நேரில் காண ஒருவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.2,500. ஆன்லைன் மூலம் பதிவு செய்து நுழைவு டிக்கெட் பெறலாம்.

ரூ.75 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்

இந்த மாநாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொடர்பாக ரூ.75 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கர்நாடகத்தில் விமானவியல் துறையில் அதிகளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் வணிக ரீதியிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டு, அவற்றை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்