விலைவாசி உயர்வு விவாதம்; தப்பியோடும் எதிர்க்கட்சிகள்: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வு விவாதத்தில் பங்கேற்பதில் இருந்து எதிர்க்கட்சிகள் தப்பியோடுகிறார்கள் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

Update: 2022-08-01 08:31 GMT



புதுடெல்லி,



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ந்தேதி தொடங்கியது. இந்த தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டங்களும் நடைபெற்றன.

இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது. எனினும், அக்னிபத் திட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பல்வேறு நாட்கள் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 32 மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே இன்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ.க. எம்.பி.க்கள், மேற்கு வங்காளத்தில் ஆசிரியர் நியமன முறைகேடுகளில் தொடர்புடைய முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி விவகாரத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று, இடது சாரி எம்.பி.க்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு விவகாரத்திற்காக கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டம் நடந்து வந்த நிலையில், அவர்களுக்கு போட்டியாக, ஆளும் பா.ஜ.க.வும் போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியால் அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படும் நிலை காணப்பட்டது. இந்த சூழலில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறும்போது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நிறைய மசோதாக்கள் உள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசத்தில் தொடர்ந்து, அவை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

சஸ்பெண்டு விவகாரத்தில், எம்.பி.க்கள் பதாகைகளை தூக்கி கொண்டு அவைக்கு வரமாட்டார்கள் என காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் உறுதி கூறினால், நாங்கள் சஸ்பெண்டு உத்தரவை வாபஸ் பெற தயார்.

அதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் எங்களுடன் ஒத்துழைக்காமல் உள்ளனர். விலைவாசி உயர்வு விவாதத்தில் இருந்து அவர்கள் தப்பியோடுகிறார்கள். உண்மையில் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இருக்குமென்றால், அவை சீராக இயங்க அவர்கள் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்