ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹாவின் தந்தை போட்டி; ஜெயந்த் சின்ஹா ஆதரவு யாருக்கு?
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. ஜெயந்த் சின்ஹாவின் தந்தையும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா இப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. ஜெயந்த் சின்ஹாவின் தந்தையும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்ஹா இப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டு உள்ளார்.
இது குறித்து ஜெயந்த் சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
"தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு ஜிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கை எப்போதும் பழங்குடி சமூகம் மற்றும் ஏழை நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த முடிவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு பதிவிட்டு தனது வாழ்த்துக்களை திரௌபதி முர்முவுக்கு தெரிவித்துள்ளார்.
மறுபுறம், "எனது தந்தை யஷ்வந்த் சின்ஹா ஜி, எதிர்க்கட்சிகளால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை, குடும்ப விவகாரமாக ஆக்கிவிட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் பா.ஜ.க.வை சார்ந்துள்ளேன் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளேன். ஆதலால், நான் எனது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ஜனாதிபதி தேர்தலில் ஜெயந்த் சின்ஹா பா.ஜ.க கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவார் எனத் தெரிகிறது.