"பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்" - அமித்ஷாவிடம் சிராக் பாஸ்வான் எம்.பி. கோரிக்கை மனு
பீகாரில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், உடனடியாக ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் சிராக் பாஸ்வான் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.;
பாட்னா,
பீகார் மாநிலத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில எதிர்கட்சியான பா.ஜ.க. இது தொடர்பாக சட்டமன்ற விவாதத்தின் போது, முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது.
இந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிராக் பாஸ்வான், இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமித்ஷாவிடம் வழங்கினார்.
பீகாரில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மணல் கொள்ளை, கள்ளச்சாராயம் தயாரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு மாநில அரசு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குவதாகவும் சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.