ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? நிதிஷ் குமார் திட்டவட்ட மறுப்பு
நான் பீகாரை விட்டு எங்கும் போகப்போவதும் இல்லை. இதுபோன்ற தகவல்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.;
பாட்னா,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் நியமிக்கப்படுவார் என்று பரவலாக செய்திகள் வெளியாகி வந்தாலும், சரத் பவார் அதை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் பெயரும் ஜனாதிபதி தேர்தல் போட்டியிடக்கூடும் எனப் பேசப்பட்டது. இது தொடர்பாக நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த நிதிஷ் குமார், நான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இல்லை. நான் பீகாரை விட்டு எங்கும் போகப்போவதும் இல்லை. இதுபோன்ற தகவல்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை" என்றார் .