குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி முர்மு இன்று உரை ஆற்றுகிறார்
குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுகிறார்.
புதுடெல்லி,
நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை (26-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடுகிறது.
இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார்.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், "நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந் தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது.
ஜனாதிபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.