'தண்ணீர் ஆதாரங்களை பாதுகாக்க உதவும் தொழில்நுட்பங்களை கண்டுபிடியுங்கள்' விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள்
‘தண்ணீர் ஆதாரங்களை பாதுகாக்க உதவும் தொழில்நுட்பங்களை கண்டுபிடியுங்கள்’ என விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
தண்ணீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு உதவும் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார். டெல்லி புறநகரான கிரேட்டர் நொய்டாவில், தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான 7-வது இந்திய தண்ணீர் வார விழா நேற்று நடந்தது.
இந்த விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
தண்ணீர் பிரச்சினை பல முகங்களைக் கொண்டது, சிக்கலானது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முயற்சிகள் எடுக்க வேண்டும். தண்ணீர் வரம்புக்கு உட்பட்டது என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். சரியான பயன்பாடு, தண்ணீர் மறு சுழற்சி ஆகியவற்றின்மூலம் மட்டுமே தண்ணீர் வளத்தை நீண்ட காலத்துக்கு தக்க வைக்க முடியும். எனவே தண்ணீரை நாம் அனைவரும் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. வாழ்க்கையில் தண்ணீர் முக்கியமானது மட்டுமல்ல, வாழ்க்கைக்கு பிந்தைய பயணத்திலும் தண்ணீர் முக்கியம். எனவேதான் எல்லா தண்ணீர் ஆதாரங்களும் புனிதமானவையாக கருதப்படுகின்றன. ஆனால் நிலைமையை இப்போது பார்த்தால் அது கவலை தருவதாக தோன்றுகிறது.
மக்கள் தொகை பெருகி வருவதன் காரணமாக, நமது ஆறுகள், அணைகளின் நிலைமை மோசமாக உள்ளது. கிராமத்தில் குளம் குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. பல உள்ளுர் ஆறுகள் அழிந்து போய் விட்டன.
விவசாயத்தாலும், தொழிற்சாலைகளாலும் தண்ணீர் அதிகளவில் சுரண்டப்படுகின்றன. பூமியில் சுற்றுச்சூழல் சமநிலைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வானிலை முறைகள் மாறி வருகின்றன. பருவம் தப்பிய கூடுதல் மழை சாதாரணமாகி விட்டது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் தண்ணீர் மேலாண்மை விவாதம் என்பது மிகவும் பாராட்டத்தக்க ஒரு நடவடிக்கை.
தண்ணீர் பிரச்சினை என்பது இந்தியாவுக்கு மட்டுமானதல்ல, ஒட்டு மொத்த உலகத்துக்குமானது. நமது நாட்டில் 80 சதவீத தண்ணீர் வளம் விவசாயத்துக்குத்தான் செல்கிறது. எனவே தண்ணீரை சரியாக பயன்படுத்துவதும், நீர்ப்பாசனத்தில் தண்ணீர் மேலாண்மையும், நமது தண்ணீர் பாதுகாப்பில் மிக முக்கியமானவை ஆகும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு தூய்மையான தண்ணீர் தருவது இனிவருங்காலங்களில் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
பொதுமக்கள், விவசாயிகள், தொழில் அதிபர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் தங்கள் அறநெறிகளில் தண்ணீர் பாதுகாப்பை ஒரு அங்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
விஞ்ஞானிகள், நகர திட்டமிடுபவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் தண்ணீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கு உதவும் தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும். தண்ணீர் பாதுகாப்பில் தொழில் நுட்பம் முக்கிய பங்காற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.