ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜம்மு, இமாச்சலப் பிரதேசம் பயணம்..!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜூன் 9 முதல் 11 வரை ஜம்மு, இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.;
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற ஜூன் 9 முதல் 11 தேதி வரை ஜம்மு மற்றும் இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி செயலகம் இன்று தெரிவித்துள்ளது.
ஜூன் 9 அன்று, ஜம்முவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) 5-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்ற உள்ளார். மேலும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
இதுகுறித்து ஐஐடி, ஜம்மு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "ஜூன் 9 அன்று நடைபெறும் 5-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை விருந்தினராக கலந்து கொள்ள உள்ள மாண்புமிகு இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் அவர்களை ஐஐஎம் வரவேற்கிறது" என்று பதிவிட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி, ஜூன் 10 அன்று நடைபெற உள்ள தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகத்தின் 6-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.