ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 மாநிலங்களில் சுற்றுப்பயணம் - இன்று தொடங்குகிறார்
கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் மாநிலங்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.;
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடகா, தெலுங்கானா உள்பட 3 மாநிலங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் 7-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் முதலில் கர்நாடகா செல்லும் அவர், முட்டனஹள்ளி சத்யசாய் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மாநில கவர்னர் மாளிகையில் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பழங்குடியின பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
நாளை (செவ்வாய்க்கிழமை) தெலுங்கானா செல்லும் அவர், ஐதராபாத்தில் நடைபெறும் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழாவில் உரையாற்றுகிறார்.
மராட்டியத்தின் கட்சிரோலியில் உள்ள கொண்ட்வானா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 5-ந்தேதி பங்கேற்கும் ஜனாதிபதி, 7-ந்தேதி வரை மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த தகவல்கள் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.