புதுச்சேரி மந்திரி சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!
புதுச்சேரி போக்குவரத்துத்துறை மந்திரி சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.;
புதுச்சேரி,
புதுவையில் ஒரே பெண் மந்திரியாக வலம் வந்த சந்திரபிரியங்கா கடந்த 9-ந் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக கவர்னர், முதல் மந்திரிக்கு கடிதம் அனுப்பினார். சாதி, பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
ஆனால் அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கவர்னர் மற்றும் சபாநாயகர் தெரிவித்து இருந்தனர். மேலும் அவரது பணியில் திருப்தி இல்லாததால் பதவி நீக்கத்துக்கு முதல் மந்திரி பரிந்துரை செய்தார் என்றும் கூறப்பட்டது.
பொதுவாக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனடியாக வெளியிடப்படும். ஆனால் சந்திரபிரியங்கா விவகாரத்தில் 10 நாட்களுக்கு மேலாகியும் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்தது. இதனால், அவர் ராஜினாமா செய்தாரா, அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா என்ற குழப்பம் மக்களிடையே நிலவி வந்தது.
இந்த நிலையில், புதுச்சேரி போக்குவரத்து துறை மந்திரி சந்திர பிரியங்காவின் நீக்கத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்து புதுச்சேரி அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்கா அதிகாரப்பூர்வமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.