பலம் வாய்ந்த ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கினார்; கர்நாடக அரசியலில் பா.ஜ.கவுக்கு கடும் பின்னடைவு
மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிரான பசவண்ணரின் சிந்தனையுடன், கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா என்ற கட்சியை துவங்கியுள்ளேன் என ஜனார்த்தன ரெட்டி கூறினார்;
பெங்களூரு
கர்நாடகாவில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குறித்து பட்டிதொட்டியெல்லாம் தெரியும். அந்த அளவுக்கு கர்நாடகத்தில், பெல்லாரி பகுதியில் சுரங்கத்தொழிலில் பெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். 2016-ல் மகளுக்கு, 650 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்து, நாட்டையே அதிரச்செய்தவர்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.கவில் இருக்கும் ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரி பகுதியில், 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சுஷ்மா சுவராஜ்க்கு தீவிர ஆதவராக களத்தில் நின்றவர்.
அதன்பின், இந்த 20 ஆண்டுகளில், பா.ஜ.கவின் மேலிடத்தில் அமித் ஷா உள்பட பல தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுடன், பெரும் பணபலம், சமூக வாரியான ஆதரவு என, கர்நாடக அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாதவராக உள்ளார். இவரின் வரவுக்குப்பின் தான், கர்நாடக தேர்தல் களத்தில் அதீத அளவு பணப்புழக்கம் ஏற்பட துவங்கியது என்ற பேச்சும் உண்டு.
கர்நாடகத்தில் நடந்த மாபெரும் சுரங்க ஊழல், நிதி மோசடி வழக்குகளில் தொடர்பில் இருந்ததற்காக, மத்திய குற்றபுலனாய்வுத்துறை அதிகாரிகள் இவர் மீது வழக்கு பதிவு செய்தபோது தலைமறைவானார். பின், நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, 'சுரங்க மாபியா, கனிமவள மாபியா' என, அனைத்து கட்சியினராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.
'ஜனார்த்தன ரெட்டியின் ஊழல்களை பா.ஜ.க ஆதரிக்கிறது,' என, எதிர்க்கட்சிகள் பேசி வருவதால், கடந்த சில ஆண்டுகளாக அமித் ஷா, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை என, பா.ஜ.கவினர் இவருடனான நட்பை குறைத்துவிட்டனர்.
'தனக்கு கட்சியில் போதிய செல்வாக்கு இல்லை,' என, தனது சகாக்களிடம் நீண்ட நாட்களாகவே ஜனார்த்தன ரெட்டி கூறி வந்த நிலையில், இவரை சமாதானப்படுத்த இவரது நண்பரும் தற்போதைய பா.ஜ.க போக்குவரத்து துறை மந்திரியுமான ஸ்ரீராமலு முயற்சித்தும் பயன் இல்லை. இந்த நிலையில், பா.ஜ.க–வுடனான தனது, 20 ஆண்டுகால உறவை முறித்த ஜனார்த்தன ரெட்டி, 'கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா – கே.பி.பி.ஆர்' என்ற தனிக்கட்சி தொடங்கி உள்ளார்.
கட்சி துவங்கிய ஜனார்த்தன ரெட்டி, பெங்களூருவில் நிருபர்களிடம்,பேசும் போது ``நான் பா.ஜ.க–வில் உறுப்பினராக இல்லை என்றும், அந்தக் கட்சிக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும் பா.ஜ.க மேலிட தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், மாநில மக்கள் நான் இன்னும் பா.ஜ.கவில் இருப்பதாக நினைக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான், புதிய கட்சியை தொடங்கியுள்ளேன்.
மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிரான பசவண்ணரின் சிந்தனையுடன், கல்யாண ராஜ்ய பிரகாதி பக்ஷா என்ற கட்சியை துவங்கியுள்ளேன். எங்கள் கட்சி, 2023 பேரவைத் தேர்தலில் போட்டியிடும். விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பேன். நான் தொடங்கிய திட்டங்கள் என்றுமே தோல்வியை கண்டதில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களில் நானும் ஒருவன்.
மாநில மக்களின் ஆசியுடன் என் கட்சி வளர்ச்சி பெறும். எனது மனைவி, எனது அரசியல் பயணங்களுக்கு துணை நிற்பார். அடுத்த 10, 15 நாள்களில் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை அறிவிப்பேன். அப்போது சில வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி தொகுதியில் நிற்பேன்,'' எனக்கூறினார்.
முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கி இருப்பது பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரரான சோமசேகர ரெட்டி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
அவரது மற்றொரு சகோதரரான கருணாகர ரெட்டியும் பா.ஜனதாவில் உள்ளார்.எல்லாவற்றுக்கும் மேலாக ஜனார்த்தன ரெட்டியின், மிகவும் நெருங்கிய நண்பரான ஸ்ரீராமுலு போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருகிறார். இதனால் அவர்கள் பா.ஜனதாவில் இருப்பார்களா? ஜனார்த்தன ரெட்டியின் புதிய கட்சியில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.