மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தொடர் மின்தடை - அரசு நிகழ்ச்சியில் மந்திரிகள் தவிப்பு

உத்தரபிரதேசத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.;

Update: 2023-03-20 22:13 GMT

நொய்டா,

உத்தரபிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்களில் ஒரு பிரிவினர் கடந்த 17-ந்தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேநேரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இது நொய்டாவில் நடந்த அரசு நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது. அங்குள்ள பொருட்காட்சி மையத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஒன்றின் திறப்பு விழா நடந்தது. இதில் மாநில மந்திரிகள் இருவர் கலந்து கொண்டனர்.

இந்த விழா நடந்து கொண்டிருந்த அரங்கில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் அரங்கில் சில நிமிடங்களுக்கு இருள் மற்றும் உஷ்ணம் நீடித்தது. இதனால் மந்திரிகள் மற்றும் பார்வையாளர்கள் பெரும் அவதியடைந்தனர். பின்னர் ஜெனரேட்டர்கள் மூலம் அரங்கில் மின்இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகே அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் அரசு வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்