துப்பாக்கி இல்லாமல் தோட்டாக்கள் வைத்திருப்பது குற்றம் இல்லை-கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

துப்பாக்கி இல்லாமல் தோட்டாக்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-08-17 21:26 GMT

பெங்களூரு: துப்பாக்கி இல்லாமல் தோட்டாக்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தோட்டாக்கள் வைத்திருந்தவர் மீது...

தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் ஜோசப். இவர், மங்களூரு விமான நிலையத்திற்கு சென்றபோது, அவரது பையில் இருந்து 2 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டு இருந்தது. அந்த 2 தோட்டாக்களும் செயல் திறனுடன் இருந்ததும் தெரிந்தது. இதுதொடா்பாக பஜ்பே விமான நிலைய போலீசார், ஜான் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். சட்டவிரோதமாக அவர் ஆயுதங்கள் வைத்திருந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி ஜான் சார்பில், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடா முன்னிலையில் நடைபெற்று வந்தது.

சட்டப்படி குற்றம் இல்லை

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும் போது, 'தனது மனுதாரர் விமான நிலையத்திற்கு சென்ற போது, அவரது கையில் தோட்டாக்கள் எப்படி வந்தது என்றே தெரியாது. தோட்டாக்கள் இருந்தாலும், அவரிடம் துப்பாக்கி எதுவும் இல்லை. எனவே அவர் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனு மீது தீர்ப்பு கூறிய நீதிபதி ஹேமந்த் சந்தனகவுடா, ஜான் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் நீதிபதி கூறுகையில், 'துப்பாக்கி இல்லாமல் ஒரு நபர் முழு செயல் திறனுடன் கூடிய தோட்டாக்களை வைத்திருப்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி தவறு இல்லை. வெறும் தோட்டாக்களை மட்டுமே வைத்திருப்பது சட்டப்படி குற்றம் இல்லை. குற்றங்களில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கில் மனுதாரர் துப்பாக்கி தோட்டாக்களை தன்னுடன் எடுத்து செல்லவில்லை என்பதால், அவர் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது', என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்