சிறுதானிய உற்பத்தியில் 3 கோடி விவசாயிகள்: பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்து பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய மந்திரி எல்.முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.பொங்கல் விழாவையொட்டி மத்திய மந்திரி எல்.முருகன் வீடு கிராமத்தை போல் களை கட்டி இருந்தது.
சுற்றிலும் கரும்பு, மஞ்சள், வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.கிராமத்து குடிசை வீட்டை தத்ரூபமாக அமைத்து இருந்தனர். வீட்டின் முன் பசு மாடு கட்டப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளையும் கட்டப்பட்டு இருந்தது.
வீட்டு வாசலில் புதிய மண்பானையில் மத்திய மந்திரி எல்.முருகனும் அவரது மனைவியும் பொங்கல் வைத்தனர். பொங்கல் பானை பொங்கியதும் பெண்கள் குலவையிட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக குரல் எழுப்பினார்கள். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை பிரதமர் மோடி மிகுந்த ஆர்வத்தோடு கண்டு ரசித்தார்.பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றார்.
இந்த பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு மத்திய மந்திரி எல்.முருகன், தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஜார்க்கண்ட கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் என முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று இருந்தனர்.
பொங்கல் விழாவில் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறினார்.
பிரதமர் மோடி பேசியதன் விவரம் பின்வருமாறு:
*புதிய தானியங்களை பொங்கல் திருநாளில் இறைவனுக்கு படைப்பது வழக்கம்
*சிறுதானிய உற்பத்தியில் 3 கோடி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
*சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
*வண்ணமிகு ரங்கோலி கோலத்தை போன்றது நமது நாட்டின் கலாசாரம்
*ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் இணைந்து செயல்படும்போது நாடு வளம் பெறும்
*2047ல் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.