வருணா தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக சித்தராமையா, அவரது மகன் யதீந்திராவின் தர்பார் நடந்து வருகிறது. அந்த தர்பாருக்கு முடிவு கட்டுவதற்காக தான் மந்திரி சோமண்ணா பா.ஜனதா சார்பில் வருணா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சோமண்ணாவுக்கு வருணா தொகுதி மக்கள் ஆதரவு அளிப்பார்கள். இதன்மூலம் வருணா தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக நடந்த தந்தை, மகனின் தர்பார் முடிவுக்கு வர உள்ளது.
- பிரதாப் சிம்ஹா, பா.ஜனதா எம்.பி.
பிரதமர் மோடி அலையால் பா.ஜனதா வெற்றி பெறும்
எடியூரப்பாவின் வழிகாட்டுதல், பசவராஜ் பொம்மையின் தலைமையில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 12 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டி உள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் அலை மற்றும் இரட்டை என்ஜின் அரசு செய்த சாதனைகளால் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு சாத்தியமே இல்லை.
- நளின்குமார் கட்டீல், பா.ஜனதா மாநில தலைவர்.
எனக்கு சீட் கிடைத்தது ஆச்சரியமாக உள்ளது
கோலார் தொகுதியில் போட்டியிட எனக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கோலாரில் போட்டியிட எனக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது. முதலில் கோலார் தொகுதி காங்கிரஸ் பிரமுகர்களுடன் ஆலோசித்து இருக்க வேண்டும். கோலாரில் சித்தராமையாவுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையாகும். இறுதி நேரத்தில் காங்கிரஸ் தலைமை தனது மனதை மாற்றிக் கொண்டு எனக்கு சீட் வழங்கி உள்ளது.
- கொத்தூர் மஞ்சுநாத், கோலார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்.
என் மீது பசவராஜ் பொம்மைக்கு முன்விரோதம்
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எனக்கு கடைசி நேரத்தில் சீட், வழங்கி 'பி' பாரம் கொடுத்திருந்தனர். மக்கள் ஆசீர்வாதத்துடன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனேன். அதன்பிறகு, பா.ஜனதா கட்சியில் எனது வளர்ச்சி பசவராஜ் பொம்மைக்கு பிடிக்கவில்லை. என் மீது அவருக்கு முன்விரோதம் இருந்து வருகிறது. எனக்கு மக்கள் ஆதரவு இருப்பதை தெரிந்து தான், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எனக்கு சீட் கிடைக்காமல் இருக்க பசவராஜ் பொம்மை செயல்பட்டார்.
- நேரு ஒலேகர், பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.
காங்கிரஸ் கட்சியின் சாதாரண தொண்டன் நான்
கர்நாடக மேல்-சபை முன்னாள் தலைவர் சுதர்சன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியில் நான் 2-வது கட்ட தலைவர் என்று எம்.பி.பட்டீல் கூறி இருக்கிறார். நான் எப்போதும் காங்கிரஸ் சட்சியில் சாதாரண தொண்டன் தான். முதலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும். அதன்பிறகு, மற்றவை பற்றி யோசிக்கலாம்.
- டி.கே.சிவக்குமார், மாநில காங்கிரஸ் தலைவர்.