11 மாநிலங்களில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்றுமுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்!
பீகார், குஜராத், அரியானா, ஜார்கண்ட், மராட்டியம், பஞ்சாப்,மேற்கு வங்காளம் மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.;
புதுடெல்லி,
போலியோ என்னும் இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து வழங்குவது தொடர்பான 2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை தேசிய நோய்த்தடுப்பு நாள் இன்று முதல் 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படுகிறது.
அதன்படி, பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், அரியானா, ஜார்கண்ட், மராட்டியம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ,மேற்கு வங்காளம் ஆகிய நாட்டின் 11 மாநிலங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
இந்த போலியோ இயக்கத்தின் போது, 5 வயதுக்குட்பட்ட சுமார் 3.9 கோடி குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்றும், சாவடிகளிலும், அலைபேசி மற்றும் போக்குவரத்துக் குழுக்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக, வழக்கமான நோய்த்தடுப்பு திட்டத்தில், போலியோ வைரஸ் தடுப்பூசியையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா "போலியோ இல்லாத நாடு " என்று சான்றிதழ் பெற்றிருந்தாலும், போலியோ தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.