வாலிபர் கொலை வழக்கில் காவலாளி கைது
பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.பி.அக்ரஹாரா:
தலையில் கல்லை போட்டு கொலை
பெங்களூரு கே.பி.அக்ரஹாரா 5-வது கிராஸ் பகுதியில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு வாலிபர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பெண்கள், 3 ஆண்கள் சேர்ந்து வாலிபரிடம் தகராறு செய்தனர். பின்னர் ஒரு பெண் அந்த வாலிபர் மீது செங்கலால் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் 6 பேரும் சேர்ந்து வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருந்தனர்.
கொலை செய்த பின்னர் 6 பேரும் தப்பி சென்று விட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கே.பி.அக்ரஹாரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலையான வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த வாலிபர் யார், அவரை கொலை செய்தது யார் என்பது பற்றி போலீசாருக்கு உடனடியாக தெரியவில்லை.
பாகல்கோட்டை வாலிபர்
இதற்கிடையே வாலிபரை, 6 பேரும் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கொலையான வாலிபர் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியை சேர்ந்த மஞ்சுநாத் ஜமகண்டி (வயது 26) என்பது தெரியவந்தது.
பாதாமியில் ஓட்டல் நடத்தி வந்த மஞ்சுநாத் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலை தேடி பெங்களூருவுக்கு வந்து உள்ளார்.
காந்திநகரில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்த மஞ்சுநாத் கே.பி.அக்ரஹாராவில் வசிக்கும் உறவினர்களை சந்திக்க சென்று உள்ளார். அப்போது தான் மஞ்சுநாத்தை 6 பேரும் சேர்ந்து கொலை செய்து உள்ளனர். மஞ்சுநாத் கொலை தொடர்பாக பாதாமியை சேர்ந்த காவலாளி ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைதானவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் கொலைக்கான காரணத்தை சரியாக சொல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெண் விவகாரத்தில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.