உத்தரகாண்ட் வன்முறை: சட்டவிரோத கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் போலீஸ் நிலையம் கட்டப்படும்; முதல்-மந்திரி அதிரடி
உத்தரகாண்ட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டபோது வன்முறை ஏற்பட்டது.;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்ட்வானி நகரில் வான்புல்புரா பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி மற்றும் இஸ்லாமிய மதப்பள்ளியான மதராசா உள்ளன. இந்த இரு கட்டிடங்களும் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்டிடங்களை இடிக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 8ம் தேதி (வியாழக்கிழமை) நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க வான்புல்ரா பகுதிக்கு சென்றனர். கோர்ட்டு உத்தரவு என கூறி 2 கட்டிடங்களையும் இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரிகள் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட நிலைமையை கட்டுக்குள்கொண்டுவர போலீசார் தடியடி கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால், வான்புல்புரா பகுதியை வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். வன்முறை சம்பவத்தில் போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
நிலைமையை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு ஹல்ட்வானி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையால் உத்தரகாண்ட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், வான்புல்புரா பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் போலீஸ் நிலையம் கட்டப்படும் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இன்று அறிவித்துள்ளார்.