போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்திற்கு செல்போன் எடுத்து செல்ல தடை இல்லை
கர்நாடகத்தில் போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்திற்கு செல்போன் எடுத்து செல்ல தடை இல்லை என்று டி.ஜி.பி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, போலீஸ் துறைக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை வழங்குமாறு கேட்டார். அதில் போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விவரங்களை கேட்டு இருந்தார். அதற்கு போலீஸ் டி.ஜி.பி. அலுவலக அதிகாரி, நரசிம்மமூர்த்திக்கு பதிலளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
போலீஸ் அதிகாரிகள் அலுவலகத்திற்கு செல்போன் எடுத்து செல்ல தடை விதித்திருப்பது குறித்து உத்தரவு அல்லது சுற்றறிக்கையின் நகலை வழங்குமாறு தாங்கள் கேட்பது சரியானதே. போலீஸ் அதிகாரிகளின் அலுவலகத்திற்குள் செல்போன் பயன்படுத்தவோ அல்லது எடுத்து செல்லவோ எந்த தடையும் விதிக்கவில்லை. அவ்வாறு உத்தரவு பிறப்பித்தது குறித்து தகவல் இல்லை. நிலைமைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு எடுக்கிறார்கள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.