போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை

கர்நாடகத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-01 21:47 GMT

மைசூரு:-

மந்திரி பரமேஸ்வர் வருகை

கர்நாடக போலீஸ் மந்திரி பரமேஸ்வர் ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று மைசூருவுக்கு வந்தார். காலை 8 மணிக்கு மைசூருவுக்கு வந்த அவர், சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் ெசய்தார். பின்னர் ைமசூரு அரண்மனைக்கு வந்து மகாராணி பிரமோதா தேவியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். மேலும் அவருடன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, அரண்மனையை சுற்றி பார்த்தார்.

அதன்பிறகு, சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்தூர் மடத்துக்கு சென்ற பரமேஸ்வர், மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமியிடம் ஆசி பெற்றார். இதையடுத்து அங்கு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய தொழில்நுட்பம்

நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்திலும் தினந்தோறும் சைபர் குற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடகத்தில் சைபர் குற்றங்களை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். சைபர் குற்றங்களை தடுப்பது போல், சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரவுவதை தடுக்கவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜனதா ஆட்சியில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்தது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. முந்தைய அரசு மறுதேர்வு நடத்தவும் முடிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து தேர்வு எழுதியவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் மறுதேர்வு நடத்த முடியாத நிலை உள்ளது.

பதவி உயர்வு காரணமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் 1,000 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதனை நிரம்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.

பதிலடி கொடுப்போம்

காங்கிரஸ் அறிவித்த 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி எடியூரப்பா மற்றும் பா.ஜனதாவினர் 4-ந்தேதியில் இருந்து தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளை போராட்டம் நடத்த வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. அவர்களை யாரும் தடுக்க போவதும் இல்லை. அவர்கள் என்ன காரணத்திற்காக போராட்டம் நடத்தினாலும் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. விரைவுச்சாலையில் எச்சரிக்கை பலகை எதுவும் இல்லை. இதுதொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

போலீசாருக்கு விடுமுறை

கர்நாடகத்தில் போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அவுராத்கர் அறிக்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு விசேஷ சலுகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து மந்தரி பரமேஸ்வர், போலீஸ் பயிற்சி மையத்துக்கு சென்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்