மகள் பலாத்கார வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூடாது என கூறி மனைவியை தாக்கிய தொழிலாளி மீது போலீசில் புகார்
மகள் பலாத்கார வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூடாது என கூறி மனைவியை தாக்கிய தொழிலாளி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூரு ஜக்கூர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 10 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில் தம்பதியின் மகளான சிறுமி கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்தாள். அப்போது சிவா என்பவர் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் சிவாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சிவா, தன் மீதான பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராக கூடாது என்று சிறுமியின் தாயிடம் கூறி இருந்தார்.
மேலும் ரூ.1 லட்சம் தருவதாகவும் கூறினார். ஆனால் இதனை ஏற்க சிறுமியின் தாய் மறுத்தார். இதனால் ரூ.1 லட்சம் தருவதாக சிறுமியின் தந்தையிடம் சிவா கூறினார். இதனை ஏற்ற சிறுமியின் தந்தை, தனது மனைவியிடம் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராக கூடாது என்று கூறினார். ஆனால் இதனை ஏற்க சிறுமியின் தாய் மறுத்து விட்டார். இதனால் சிறுமியின் தாயை, அவளது தந்தை தாக்கியதாக தெரிகிறது.