விநாயகர் சிலைகள் வைக்க போலீசார் கட்டுப்பாடு
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகளை விதித்து பெங்களூரு போலீசார் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளனர்.
பெங்களூரு:
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகளை விதித்து பெங்களூரு போலீசார் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை
கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்து அமைப்பினர், பா.ஜனதாவினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பின்னர் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த இந்து அமைப்பினர், பா.ஜனதா கட்சியினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
சிலைகள் விற்பனை மும்முரம்
இதற்கிடையே வழக்கம் போல், ரசாயனம் அல்லாத விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பொதுமக்கள் பிரதிஷ்டை செய்து விசர்ஜனம் செய்யவும் கர்நாடக அரசும், மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விநாயகர் சிலைகள் விற்பனை பெங்களூரு ராஜாஜிநகர், கோரமங்களா, ஒயிட்பீல்டு, ஜெயநகர், விஜயநகர் உள்பட பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுபோல் கே.ஆர். மார்க்கெட்டில் பூஜை பொருட்கள், பழங்கள் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் வாழை இலை, பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை வழக்கத்தை விட இருமடங்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைதியாக கொண்டாட நடவடிக்கை
ரசாயனத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வருகிறார்கள். மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும் வருகிற 28-ந்தேதி மீலாது நபி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
இதனால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை, மீலாது நபி பண்டிகைகளை அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அமைதியாக கொண்டாடவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் நிகழாமல் இருக்கவும் மாநிலம் முழுவதும் போலீசாரும், அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் பெங்களூரு மாநகரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட பெங்களூரு மாநகர போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது போலீஸ் கமிஷனர் தயானந்த் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
அனுமதி பெற வேண்டும்
*பெங்களூருவில் சாலைகளில் வைத்து விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்வதற்கு தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்.
*போலீசாரின் அனுமதி பெற்ற பிறகே, சாலைகளில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.
*ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு சிறப்பு அனுமதி அவசியம்.
*சர்ச்சைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க கூடாது.
* ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் விநாயகர் சிலை வைத்தவரும், ஊர்வலம் நடத்தும் குழுவினரும் தான் முழுபொறுப்பு.
* அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தடையில்லா சான்று கட்டாயம்
* நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தீயணைப்பான்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம்.
* மரக்கட்டை மற்றும் எரிபொருட்கள் ஏதும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* மின்வாரியம், தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியமாகும்.
* காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி கொள்ளலாம். அதன் பிறகு அதை பயன்படுத்த கூடாது.
* ஒலி மாசு ஏற்படும் வகையில் அதீத சத்தத்தை வெளிப்படுத்தும் ஸ்பீக்கர்களை பயன்படுத்த கூடாது.
பட்டாசு வெடிக்க கூடாது
*பிற மதவழிபாட்டு பகுதிகள் முன்பு பட்டாசுகள் வெடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட கூடாது.
* இரவு 10 மணிக்கு முன்பு பூஜைகளை முடித்து விநாயகர் சிலைகளை கரைத்துவிட வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட போலீசார் கண்காணிக்க வேண்டும். அதை மீறும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிலைகள் கரைக்க ஏற்பாடுகள்
இந்த நிலையில், விநாயகர் சிலைகளை கரைக்க தேவையான ஏற்பாடுகளும் பெங்களூரு மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் நடமாடும் டேங்கர்கள் மற்றும் ஏரிகளில் தற்காலிக குளமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஏரி மற்றும் நடமாடும் டேங்கர்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
418 நடமாடும் டேங்கர்கள்
அதன்படி, பெங்களூரு அல்சூர் உள்பட 39 ஏரிகளில் தற்காலிகமாக குளங்கள் அமைக்கப்பட்டு, அங்கு விநாயகர் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பெங்களூரு நகர் முழுவதும் 418 நடமாடும் டேங்கர்களிலும் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்தந்த வார்டு பகுதிகளில் நடமாடும் டேங்கர்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கு சென்று பொதுமக்கள் விநாயகர் சிலைகளை கரைத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவிக்கு தொடர்புகொள்ள...
விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1533 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
அதே நேரத்தில் பெங்களூரு நகரவாசிகள் தங்களது பகுதியில் எங்கு சென்று விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்பதை https://apps.bbmpgov.in/ganesh2023/ என்ற இணையதளம் மூலமாகவும் மக்கள் அறிந்து கொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.