வாகனங்களில் அரசியல் கட்சி தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை

வாகனங்களில் அரசியல் கட்சி தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2023-04-04 21:27 GMT

பெங்களூரு:

வாகனங்களில் அரசியல் கட்சி தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

பேனர்கள் அகற்றும் பணி

கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன்காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூரு உள்பட அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அரசியல் பிரமுகர்கள் தொடர்பான தகவல்கள் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரம் அபராதம்

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் சார்பில் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், வாகனங்களில் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான புகைப்படம் உள்ளிட்ட ஸ்டிக்கர் எதுவும் இருக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் அதிகாரிகளின் உத்தரவையடுத்து, நேற்று பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் வட்டார போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரசியல் கொடிகள், சின்னங்கள் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டி சென்ற வாகனங்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அனுமதி பெறாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்