பண மதிப்பிழப்பு தோல்வியை பிரதமர் மோடி இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை; காங்கிரஸ்
கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500, 1000 தாள்கள் செல்லாது அறிவித்தார்.;
புதுடெல்லி,
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று கூறினார். அதை அறிவித்து இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
தற்போது, பொதுமக்களிடையே புழங்கும் பணம், ரூ.30 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பதாவது:-
கருப்பு பணத்தில் இருந்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டை விடுவிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அது வர்த்தகத்தை அழித்து, வேலைவாய்ப்புகளை பறித்து விட்டது.
அந்த அதிர்ச்சி சம்பவம் முடிந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், பொதுமக்களிடையே புழங்கும் பணம், 2016-ம் ஆண்டு இருந்ததை விட 72 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி, பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்த அந்த காவிய தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.