'மணிப்பூர் விவகாரம் குறித்து 1,800 மணி நேர மவுனத்திற்குப் பிறகு 30 வினாடிகள் பிரதமர் பேசியுள்ளார்' - ஜெய்ராம் ரமேஷ்

மணிப்பூர் முதல்-மந்திரி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-20 15:26 GMT

புதுடெல்லி,

மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக டெல்லியில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய அவர், "மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம். குற்றவாளிகள் என்றும் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மிகக் குறைவாகவும், மிகவும் தாமதமாகவும் பேசியுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"சுமார் 1,800 மணி நேரத்திற்கும் அதிகமான மன்னிக்க முடியாத மவுனத்திற்குப் பிறகு, இறுதியாக மொத்தம் 30 வினாடிகள் மணிப்பூரைப் பற்றி பிரதமர் பேசினார். அதன்பிறகு, மற்ற மாநிலங்களில் குறிப்பாக எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை சமன் செய்து, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை புறக்கணித்து, மணிப்பூரில் நடந்த மாபெரும் நிர்வாகத் தோல்விகள் மற்றும் மனிதாபிமான துயரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பிரதமர் முயன்றார்.

முதலாவதாக, நடந்துகொண்டிருக்கும் இனக்கலவரத்தின் பிரச்சினையை அவர் முற்றாகப் புறக்கணித்தார். அவர் அமைதிக்காக எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி விலகுமாறு கேட்கவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டித்தனமான வன்முறை சம்பவங்களுக்கு இது ஒரு உதாரணம் மட்டுமே.

இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளுடன் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையை சமன்படுத்த பிரதமர் முயன்றார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குற்றங்களைச் செய்தவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய 15 நாட்கள் ஆனது. 64 நாட்களுக்குப் பிறகு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக மணிப்பூர் முதல்-மந்திரி கூறுகிறார். மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு மற்றும் நிர்வாகத்திறன் முழுமையாக சரிந்துள்ளது.

பிரதமரின் பேச்சு மிகக் குறைவானது, மிகவும் தாமதமானது. வெறும் வார்த்தைகளால் இனி ஒன்றும் செய்ய முடியாது. செயல்கள் சத்தமாக பேச வேண்டும். பிரதமரும், உள்துறை மந்திரியும் இதற்கு பொறுப்பேற்காமல் தப்ப முடியாது. மணிப்பூர் முதல்-மந்திரி உடனடியாக பதவி விலக வேண்டும். மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையை உறுதிப்படுத்த இந்தியா தொடர்ந்து பதில்களைக் கோரும்."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்