குவாட் உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை ஜப்பான் பயணம்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு சுமார் 40 மணி நேரத்தில் 23 நிகழச்சிகளில் பங்கேற்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.;
புதுடெல்லி,
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு சுமார் 40 மணி நேரத்தில் 23 நிகழச்சிகளில் பங்கேற்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 24-ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (திங்கட்கிழமை) ஜப்பான் செல்கிறார். அந்த நாட்டு பிரதமர் புமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் செல்லும் அவர், அங்கு சுமார் 40 மணி நேரத்தை செலவிடுகிறார்.
இந்த நேரத்தில் அவர் 23 நிகழ்வுகளில் பங்கேற்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாட்டில் மோடி உரையாற்றுகிறார். மேலும் இந்த தலைவர்களுடன் தனித்தனியாக இரு தரப்பு உறவுகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.
அத்துடன் ஜப்பான் தொழில் நிறுவனங்களை சேர்ந்த 30 தலைமை செயல் அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல பல்வேறு வர்த்தக, தூதரக மற்றும் சமூக ரீதியிலான சந்திப்புகளிலும் பிரதமர் மோடி பங்கேற்பதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.