அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.;
புதுடெல்லி,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். குறிப்பாக இந்திய-அமெரிக்க உறவுகள் அனைத்து களங்களிலும் ஆழமாகி வருவதில் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
மேலும் ஏர் இந்தியா மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனங்களுக்கு இடையே விமான கொள்முதல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.
இந்தியாவில் சிவில் விமான போக்குவரத்து துறை விரிவடைந்து வரும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு போயிங் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த உரையாடலின்போது ஜோ பைடன், 'பிரதமர் மோடியுடன் இணைந்து உலகளாவிய சவால்களை நாங்கள் தொடர்ந்து எதிர்கொள்வதால், எங்கள் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதை நான் எதிர்நோக்குகிறேன்' என தெரிவித்தார்.
மேலும் நமது குடிமக்கள் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குகிறோம் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது பரஸ்பரம் நன்மை பயக்கும் இரு நாடுகளின் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் இந்தியாவின் தற்போதைய ஜி20 தலைமையின்போது அதன் வெற்றியை உறுதிப்படுத்த இரு தலைவர்களும் தொடர்பில் இருக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்த தகவல்களை பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.