கொல்கத்தா: நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுடன் பயணம் செய்த பிரதமர் மோடி

ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் இந்த மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-03-06 05:58 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் ரூ. 15,400 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். இதையடுத்து கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் - எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளி ஆற்றில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர். சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரெயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உரையாடியபடியே பயணம் மேற்கொண்டார். பள்ளி மாணவர்கள் பலரும் இந்த மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தினமும் 7 லட்சம் பயணிகள் இந்த மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்