பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அதில் நிர்மலா சீதாராமனும் பங்கேற்றார்.

Update: 2023-01-13 23:53 GMT

புதுடெல்லி,

வரும் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்தநிலையில், நிதி ஆயோக்கில், பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 'உலகளாவிய சிக்கலுக்கிடையே இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மீண்டெழும் திறன்' என்ற தலைப்பில் இந்த ஆலோசனை நடந்தது.

அதில், பிரபல பொருளாதார நிபுணர்கள் சங்கர் ஆச்சார்யா, அசோக் குலாதி, ஷாமிகா ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி மற்றும் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரகாசமான இடத்தில் இந்தியா

கூட்டத்தில், இந்தியா தனது வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக்கொள்வது எப்படி என்று பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இந்தியாவின் மீண்டெழும் திறனால், உலகளாவிய சிக்கலுக்கிடையே அது பிரகாசமான இடமாக உருவெடுத்திருப்பதாகவும் கூறினர்.

உலகளாவிய சிக்கல் தொடரும் என்பதால், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, மீண்டெழும் திறனை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தனியார் துறைக்கு அழைப்பு

அவர்களின் யோசனைகளை கேட்ட பிரதமர் மோடி கூறியதாவது:-

அபாய காரணிகள் இருந்தாலும், உருவாகி வரும் உலக சூழ்நிலையால், மின்னணுமயமாக்கல், எரிசக்தி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகள் உள்ளன. இவற்றை பயன்படுத்திக்கொள்ள பொது மற்றும் தனியார் துறைகள் முன்வர வேண்டும். இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் நிதிதொழில்நுட்பம் விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வாய்ப்பு உள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பணியாளர்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்