நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது விவாதிக்க பயந்து எதிர்க்கட்சியினர் ஓடிவிட்டனர் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது விவாதிக்க பயந்து எதிர்க்கட்சியினர் ஓடியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.;
எதிர்மறை எண்ணங்களை தோற்கடித்தோம்
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-
2 நாட்களுக்கு முன்பு நாங்கள் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். அவர்கள் பரப்பிய எதிர்மறை எண்ணங்களையும் தோற்கடித்தோம். எதிர்க்கட்சிகள் சபையை விட்டு ஓடியதை ஒட்டுமொத்த நாடும் பார்த்தது. மணிப்பூர் மக்களுக்கு எதிர்க்கட்சிகள் துரோகம் செய்துவிட்டன. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு விரும்புவதாக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அரசு கடிதம் எழுதியது.
விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை
ஆனால் என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். எதிர்க்கட்சிகள் அதை நடக்க அனுமதிக்கவில்லை. இது போன்ற ஒரு முக்கியமான விஷயத்தின் மீது விவாதம் நடந்திருந்தால், மணிப்பூர் மக்கள் நிம்மதியடைந்திருப்பார்கள். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண சில வழிகள் தோன்றியிருக்கும். ஆனால், மணிப்பூரின் உண்மை தங்களை மிகவும் வேதனைப்படுத்தும் என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்திருந்ததால், அது பற்றி விவாதிக்க விரும்பவில்லை.
எதிர்க்கட்சிகள் எந்த விவாதத்திலும் தீவிரமாக இல்லை. மணிப்பூர் விவகாரத்தில் அரசியல் செய்யவே அவர்கள் விரும்பினர். மக்களின் வலிகள் மற்றும் துன்பங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் கவலைப்படுவது எல்லாம் அரசியல். அதனால்தான் அவர்கள் விவாதத்தை தவிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைத்து அரசியல் விவாதங்களுக்கு முன்னுரிமை அளித்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஒழிக்க...
140 கோடி இந்தியர்களின் ஆசியுடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மத்திய அரசு தோற்கடித்தது. ஜனநாயகத்தின் வெற்றியாளர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஒழிக்க முயற்சிக்கின்றனர்.
மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எப்படி ரத்தக்களரி விளையாட்டை கட்டவிழ்த்து விட்டது என்பதை மொத்த தேசமும் பார்த்தது. இருந்தபோதிலும், மேற்கு வங்காள மக்களின் அன்பு பா.ஜ.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இவ்வாறு மோடி பேசினார்.