காங்கிரஸ் மீது பிரதமர் மோடி ஆவேச தாக்கு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு, மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்துப்பேசினார். காங்கிரஸ் கட்சியை ஆவேசமாக தாக்கிய அவர், “நீங்கள் சேற்றை அள்ளி வீசினாலும் தாமரை அதிகமாக மலரும்” என கூறினார்.;

Update:2023-02-09 23:20 IST


எதிர்க்கட்சிகள் அமளி

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல்முறையாக கடந்த 31-ந்தேதி பேசினார். இந்த உரைக்கு மரபுப்படி, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் விவாதம் நடந்தது. மக்களவையில் விவாதம் முடிந்த நிலையில் அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார்.

மாநிலங்களவையில் நேற்று விவாதம் முடிந்த நிலையில் பிரதமர் மோடி பதில் அளித்து பேச எழுந்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, பிரதமருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன், அதானி மீது அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

'தாமரை மலரும்'

எதிர்க்கட்சிகள் அவ்வப்போது கோஷங்கள் போட்டு, அமளியில் ஈடுபட்டபோதும், அதற்கு மத்தியில் பிரதமர் மோடி 90 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீங்கள் எந்தளவுக்கு சேற்றை வாரி வீசுகிறீர்களோ, அதை விட அதிகமாக தாமரை மலரும்.நான் நாட்டுக்காக வாழ்கிறேன். நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இது எதிர்க்கட்சிகளை வதைக்கிறது. அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அரசியல் செய்கிறார்கள்.

(பிரதமர் மோடியின் உரையை ஆளும் கட்சி எம்.பி.க்கள், "மோடி... மோடி" என உற்சாகத்தில் குரல் எழுப்பி கொண்டாட, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் "மோடி-அதானி, பாய்-பாய்" என கோஷமிட்டனர்.)

நேரு பெயரை சேர்க்காதது ஏன்?

600 திட்டங்களுக்கு நேரு-காந்தி குடும்ப பெயரை சூட்டி உள்ளனர். முதல் பிரதமர் நேரு மாபெரும் தலைவர் என்றால், அவரது வாரிசுகள் ஏன் அவரது பெயரை தங்களது பெயர்களின் பின்னால் சேர்ப்பதில்லை?

காங்கிரஸ் கட்சி நாடு எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெயரளவு செயல்களுக்கான 'டோக்கனிசத்தை' பின்பற்றியது. அந்த கட்சி தனது அரசியல் அபிலாசைகளைப்பற்றியே கவலைப்பட்டது. நாட்டின் நலன் குறித்து அல்ல.

ஆனால் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். எங்களுக்கு 'டோக்கனிசத்தில்' நம்பிக்கை இல்லை. நாங்கள் நாட்டை முன்னோக்கி அழைத்துச்செல்வதில் கடினமாக உழைக்கிற பாதையைத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இந்த பணியில் தொழில்நுட்பம் உதவியாக உள்ளது.

மாநில அரசுகள் கலைப்பு

அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்து, மாநிலங்கள் மற்றும் மாநிலக்கட்சிகளின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி மிதித்துப்போட்டது. யார் அதைச் செய்தது? இந்திரா காந்தி மட்டுமே அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி, மாநில அரசுகளை 50 முறை கலைத்தார்.

ஆனால் இப்போது அவர்கள் எல்லாம் காங்கிரசுடன் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களை அம்பலப்படுத்த விரும்புகிறேன். (காங்கிரசால் கேரளாவில் இடதுசாரிஅரசு, ஆந்திராவில் என்.டி.ராமாராவ் அரசு, மராட்டியத்தில் சரத் பவார் அரசு, தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் அரசு, கருணாநிதி அரசு கலைக்கப்பட்டதாக பட்டியலிட்டார்.)

பாவம் செய்த காங்கிரஸ்

கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி பாவங்கள் செய்திருக்கிறது. தற்போது அது நாட்டைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி குழி பறித்தது. அது அதன் நோக்கமாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் குழி பறித்திருக்கிறது. அவர்கள் 60 ஆண்டு காலத்தை வீணாக்கி விட்டனர். காங்கிரஸ் கட்சியின் அரசியல், பொருளாதார, சமூக கொள்கைகள் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதற்கானது. ஆனால் நாங்கள் தெரு வியாபாரி பற்றியும் கவலைப்படுகிறோம்.

90 ஆயிரம் புத்தொழில் (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளன. சிறு விவசாயிகள் இந்திய விவசாயத்துறையின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்களை வலிமைப்படுத்த அரசு உழைக்கிறது. நாங்கள் தொழில்நுட்பத்தின் சக்தியுடன் உழைக்கும் கலாசாரத்தை மாற்றி உள்ளோம். வேகத்தை அதிகரிப்பதிலும், அளவை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.

பொதுமக்களின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகள் அடிப்படையில் நாங்கள் கடினமாக உழைக்கிறோம். நாங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டுமென்றாலும் உழைக்கத்தயார். ஆனால் நாட்டின் நம்பிக்கைகள் புண்பட்டுப்போக விடமாட்டோம்.

இலவசங்கள்

நாம் உள்நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கி கொண்டு வந்தபோது, உலகமே வியந்து போனது. இந்தியா தனது தேவையை மட்டுமல்ல, 150 நாடுகளின் தடுப்பூசி தேவைகளையும் நிறைவேற்றியது. அரசியல் ஆதாயத்துக்காக மாநிலங்களில் கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை எடுப்பது, பேரழிவை ஏற்படுத்தும் கொள்கை ஆகும்.

மாநிலங்களில் உள்ள பல கட்சிகள் இலவசங்களைத் தருவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன. தேர்தல்களுக்காக பழைய ஓய்வூதியத்திட்டம் போன்ற பெரும் பணப்புழக்கத்திட்டத்துக்கு திரும்புகின்றன. இப்படி நிதி ஆரோக்கியத்துடன், பொருளாதாரக்கொள்கைகளுடன் விளையாடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு சுமையாக அமையத்தக்க விதத்தில் எந்த பாவமும் செய்யாதீர்கள்.

ஒளிமயமான எதிர்காலம்

அமிர்த காலத்தில் (சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டை நோக்கிய 25 ஆண்டு கால கட்டம்) எனது அரசு எல்லா நலத்திட்டங்களின் பலன்களும் எல்லா மக்களையும் சென்றடைவதை நோக்கமாக கொண்டுள்ளது. 100 சதவீதம் நிறைவைக் காண விரும்புகிறது. சாதி, மதத்தின் பெயரால் திருப்திப்படுத்தும் எந்தவொரு நோக்கத்துக்கும் முடிவு கட்ட விரும்புகிறது.

ஒவ்வொரு' நலத்திட்டத்திலும் நிறைவு காண்பதுதான் எங்களுக்கு உண்மையான மதச்சார்பின்மை ஆகும். இது பாகுபாட்டையும், ஊழலையும்கூட ஒழிக்கிறது. (சமையல் கியாஸ் இணைப்பு, வங்கிக்கணக்கு தொடங்குதல், மின்சார இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்டங்களை அடுக்கினார்.) இதெல்லாம், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சி ஆகும். அரசியல் ஆதாயம் எதிர்பார்த்து அல்ல.

சிலரது நடத்தையும், பேச்சுமொழியும் இந்த சபைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஏமாற்றம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானம் நிறைவேறியது

தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிறைவேறியது. அதன்பின்னர் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை முழங்கி அமளி நிலவியபோது 30 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்