"நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த உத்வேகம் அளித்தது" - காசி தமிழ் சங்கமத்துக்கு பிரதமர் மோடி புகழாரம்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். அது, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தனக்கு உத்வேகம் அளித்ததாக அவர் கூறி உள்ளார்.;

Update: 2023-04-05 00:23 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாட்டின் தென் பகுதியில் உள்ள தமிழ்நாட்டுக்கும், வடக்கே உள்ள காசிக்கும் (வாரணாசி) இடையே பழங்காலத்தில் இருந்த தொடர்புகளைக் கண்டறிந்து, அவற்றை இந்தத் தலைமுறையினருக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஒரு மாத காலம் மத்திய அரசு நடத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை இந்திய தொழில்நுட்ப கழகமும் (ஐஐடி) சிறப்புற செய்திருந்தன.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் 19-ந்தேதி காசியில் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16-ந்தேதி நிறைவுற்றது. தமிழ்நாட்டில் இருந்து திரளானோர் காசிக்கு சென்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அவர்கள் தங்களுக்கு வாய்த்த இனிய அனுபவங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

பிரதமர் மோடி பதில்

அவர்களுக்கு பிரதமர் மோடி பதில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

தனக்கு கடிதங்கள் எழுதியவர்கள், 'ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா' என்ற இயக்கத்தின் கொடியை முன்னே ஏந்திச்செல்பவர்கள் என பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

தமிழ்மொழியின் அழகு

அந்த கடிதத்தில் பிரதமர் மோடி மேலும் கூறி இருப்பதாவது:-

காசியில் தமிழ்மொழியின் அழகும், தமிழ்நாட்டின் செழுமையான கலாசாரமும் கொண்டாடப்பட்ட விதம் அருமை.

தமிழ்நாட்டு மக்களுடன் காசி மிக நீண்ட நீடித்த தொடர்பைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அந்த இடத்தின் கலாசாரத்துக்கும், நாகரிகத்துக்கும் செழுமை சேர்த்தவர்கள் ஆவார்கள். காசி தமிழ் சங்கமம், அந்த வரலாற்று நினைவுகளை மீண்டும் கிளர்ந்தெழச்செய்தது. மேலும், நாட்டின் பல்வேறு பிராந்தியங்களும் எவ்வளவு ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன எனவும் காட்டியது.

உத்வேகம் தந்தது

சுதந்திர நூற்றாண்டுக்கான அமிர்த காலத்தில் (அடுத்த 25 ஆண்டுகள்), வலுவானதும், தற்சார்புள்ளதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வழிவகைகளை ஒட்டுமொத்த நாடும் விவாதித்துக்கொண்டிருக்கிறபோது, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானதாகும். ஒரு வலுவான அடித்தளம், போற்றுதலுக்குரிய நினைவுச்சின்னத்தைக் கட்டுவதற்கு முக்கியம் ஆகும்.

காசி தமிழ் சங்கமம், நாட்டின் ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்துவதற்கான உத்வேகத்தை எனக்கு தந்துள்ளது என்று அதில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்